Tamil Thirukural

Wednesday, November 11, 2009

திரைப்பட வர்த்தக மாநாடு-கமல்

சென்னையில் வரும் நவம்பர் 18 முதல் 20ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறும் ஊடகத் திரைப்பட வர்த்தக மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொள்கிறார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியை தலைமையகமாகக் கொண்டு, அனைத்து இந்திய தொழில் வர்த்தக ஊடகம் மற்றும் கேளிக்கை தொழில் வர்த்தக கூட்டமைப்பு மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இப்போது சென்னையிலும் செயல்பட உள்ளது. இந்த அமைப்புக்கு நடிகர் கமல்ஹாசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:

இந்திய தொழில் வர்த்தக ஊடகம் மற்றும் கேளிக்கை தொழில் வர்த்தக கூட்டமைப்பு, சென்னையிலும் தொடங்கப்பட வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாகப் போராடி வந்தேன். இப்போது அதற்கு பலன் கிடைத்துள்ளது.

இந்த அமைப்பின் சார்பில் நலிந்த திரைப்படங்களுக்கு நிதியுதவி அளிப்பது, பன்னாட்டு சினிமா நிறுவனங்களுடன் இணைந்து மாநாடுகள் நடத்தி நவீன யுக்திகளைத் தமிழ்த் திரையுலகில் புகுத்துவது, சர்வதேச சினிமா நிறுவனங்களின் ஆய்வுகளை எடுத்துக்கூறி தமிழ்த் திரையுலகை மேம்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்களை செயல்படுத்தலாம்.

இந்த திரைப்பட வர்த்தக மாநாடு சென்னையில் நவ.18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டை நவம்பர 18ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சிறந்த நடிப்புப் பயிற்சிக் கல்லூரி இல்லை. இந்த அமைப்பின் மூலம் சிறந்த நடிப்புப் பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கும் திட்டம் உள்ளது. இந்த அமைப்புக்காக தமிழக முதலமைச்சர் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.

இந்த அமைப்பின் மூலம் சினிமா வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகளிடம் முன் வைப்போம். இந்தியாவின் பல்வேறுபட்ட மாநிலங்களின் கேளிக்கை வர்த்தகத் தொழிலை இந்த அமைப்பின் மூலம் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...