Tamil Thirukural

Friday, October 15, 2010

Tamil Kavithai -- நினைவுகளுடனும், தவங்களுடனும்

சாலையில் செல்லும்
கட்டிளங் காளையர் யாரும்
என்னைக் கவர்ந்திழுக்கவில்லை
உடன் பணி செய்யும்
பண்பான தோழர்கள் யாரும்
என்னைக் கவர்ந்திழுக்கவில்லை

பஸ்ஸில், ரயிலில், கோவிலில், கல்லூரியில்
யாரை நோக்கினும் ஏனோ யாரும்
என்னைக் கவர்ந்திழுக்கவில்லை
இணையத்தில் கண்ட இணையற்றவன் நீ!
உனைக் கண்ட மாத்திரத்தில் சிறு மின்னதிர்வு!
உள்ளொளி ஒன்று பூத்த உணர்வு!

உன் சுந்தரப் புன்னகை
உன் மந்தகாச சிரிப்பு
உன் ஆன்மாவின் வெளிப்பாடு
உன் கள்ளமில்லா கலாரசனை
எனப் பல...

என் உள்வெளியில் உன்மத்தம் பிடித்துக் கிடக்கிறேன்!
எத்தனையோ கோடிப் பேர் இருக்க..
உன்னிடம் மட்டும் அப்படி ஏனோ!!
எத்தனையோ ஜென்மங்கள் நாம்
இணைந்தே கடந்திருக்க வேண்டும்
அது தான்..
பார்த்தவுடன் பட்டென்று சொல்லியது என் மனம்
என் மன்னவன் நீதானடா என்று!

சஞ்சலமின்றி இத்தனை வருடம் கடந்த எனக்கு
உன் நினைவு சஞ்சாரங்களின்றி ஒரு மணித்துளியைக் கூட
கடத்த முடியவில்லையே!
என்ன செய்தாயாடா எனை நீ!

உனக்கெனப் பிறந்தேனோ!
உனக்கே உனக்காய் மலர்ந்தேனோ!
தவங்களோடு காத்துக் கிடக்கிறேன்
தங்காமல் தயங்காமல் தாமதிக்காமல்
வந்து விடு..

தனிமை கொல்கிறதென்னை!
விரைந்து வந்து கூட்டிச் செல்..
உன் வாசஸ்தலம் சிறிதெனினும்
முக மகிழ்வுடன் அக நெகிழ்வுடன்
உன்னுடன் பங்கு போட்டுக் கொள்வேன்

நினைவுகளுடனும், தவங்களுடனும்
என்றும் மாறா நேசத்துடனும்
உன்னவள் 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive