Tamil Thirukural

Wednesday, January 12, 2011

மெல்லத் தமிழினிச் சாகும்-save worlds oldest language tamil

 worlds oldest language tamil,how to save tamil,save tamil language,

"மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற பாரதியின் வார்த்தைகள் இன்று உண்மையாகிவிட்டது. காரணம் தமிழை வளர்க்க ஆக்க பூர்வமான வழிகளில் ஈடுபடாமல், அழிவுப்பாதையில் கொண்டு செல்வது தான்.

பிற மொழிகளை தடுப்பதன் மூலம் தமிழை வாழ வைத்திட இயலும் என்பது குருட்டுத்தனமான செயல் மட்டுமல்ல, பைத்தியக்காரத்தனமும் கூட. இவர்கள் உண்மையில் தமிழைப் புத்திசாலித்தனமாக குழி தோண்டி புதைத்து விட மேற்கொள்ளும் முயற்சிகள் தான் இவை யாவும்.
Join Only-for-tamil
இன்று, ஆங்கிலம் உலகையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. காரணம், அதில்தான் எல்லாமே உள்ளன. பொறியியல், மருத்துவம் அறிவியல், கலை, இலக்கியம், சட்டம், மொழி, வரலாறு என அனைத்தும் ஆங்கிலத்தில் வழிந்தோடுகின்றன. ஆங்கிலம் என்பது அவசியம் என்ற நிலையிலிருந்து கட்டாயம் என்ற நிலை இன்று உலக மக்கள் யாவரும் தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில் எல்லாத்துறை சம்மந்தமான செய்திகள், புத்தகங்கள் இன்று ஆங்கிலத்தில் அளவற்று உள்ளன. உலகமொழி ஆங்கிலம். கருத்து பரிமாற்றம், தொடர்புகள் என எல்லாவற்றிற்கும் ஆங்கிலம் என்பதுதான் இன்றைய யதார்த்தம்.

இதேபோன்றதொரு நிலை தமிழுக்கும் ஏற்படுத்திடச் செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து, இந்தி போன்ற தேசிய மொழிகளைத் தடை செய்ததனால் தமிழனின் வாழ்வு குறுகிய இருட்டறைக்குள்ளே முடங்கிவிட்டது. அவனுடைய சிந்தனை ஓட்டம் மிகக்குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிவடைந்து விட்டது. பரந்த அறிவு வேண்டுமாயின் அவன் நிச்சயம் ஆங்கிலம் அறிந்திருக்க வேண்டும். இப்படியே ஆங்கிலத்தின்பால் செல்வத்தைத் தொடங்கும் அவன், மெல்ல மெல்லத் தழிழை மறந்து விடுகிறான். தமிழின் ஒளியும் மங்கிவிடுகிறது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடியினரால் பேசப்பட்ட மொழி என்ற பழம்பெருமை இனியும் உதவாது. கன்னித்தமிழ் என்பதெல்லாம் வெறும் ஏட்டளவு பேச்சுக்களாகவே நின்று விடும்.

ஆங்கிலத்தை மிஞ்சும் அளவுக்குத் தமிழில் முன்னேற்றங்கள் / வளர்ச்சிகள் ஏற்பட்டாலொழிய தமிழைக் காப்பாற்ற இயலாது. தமிழைக் காப்பாற்ற செம்மொழியாக்கி இருப்பதனால் மலிவான அரசியல் லாபத்தைத் தவிர, வேறு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. தமிழை வளர்க்க உண்மையில் இது வழியே அன்று.

தமிழன், இந்தி ஆங்கிலம் என அனைத்து மொழிகளையும் கற்று புலமை பெறுவதுடன் தாம் அறிந்த செய்திகளை தாம் கற்ற புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்திட வேண்டும். அவ்வாறு செய்யப்படும் மொழியை நேரடி மொழிபெயர்ப்பாக இல்லாமல் இயல்பான நடையை பின்பற்றியிருத்தல் அவசியமாகும்.

ஆங்கிலத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், அதன் சொற்களஞ்சியம் என்றால் அது மிகையாகாது அதைப் போன்றதொரு மேம்பட்ட சொற்களஞ்சியம் தமிழிலும் உருவாக்கப்பட வேண்டும்.

அனைத்துத் துறை சம்மந்தமான புத்தங்கள் தமிழில் கிடைக்கப் பெறச் செய்வதோடு அம்மாதிரியான புத்தகங்கள் தமிழிலேயே இயற்றப்பட வேண்டும். ஆராய்ச்சி படிப்பு வரை தமிழிலேயே மேற்கொள்ளும் நிலை எட்டப்பட வேண்டும். ஆங்கிலத்தின் உதவியே தேவையில்லை. அனைத்தும் தமிழிலேயே கிடைக்கின்றது என்கின்ற நிலை ஏற்பட வேண்டும். தமிழில் இல்லாதது, உலகிலேயே இல்லாத ஒன்றாகும் என்கின்ற நிலைப்பாடு தமிழனின் உயிர்மூச்சாக இருக்க வேண்டும். அரசாங்கத்தினாலோ அரசியல்வாதியினாலோ இந்நிலை ஒரு நாளும் ஏற்படாது. ஒவ்வொரு தமிழனும், நெஞ்சார்ந்து தன் தாய்க்கு செய்திடும் சேவையாகக் கருதி எங்கும் பரந்து வழிந்திருக்கும் தமிழர்கள் அனைவரும் தாம் கற்றவற்றை நம்மவர்கள் தமிழிலேயே அறிந்திடச் செய்திட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் ஆங்கிலத்திற்கும் மேலாக தமிழ் வளர்ச்சிபெற்று, தன்னிகரில்லாத நிலை ஏற்படுமென்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்காது.
Join Only-for-tamil
கணிப்பொறியின் வளர்ச்சி, ஆங்கிலத்தின் வளர்ச்சியாகும். இன்று இணையத் தளத்தில் காணப்படும் 85% செய்திகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. ஏனைய மற்ற உலகமொழிகள் யாவும் சேர்ந்து 15% இவ்வேறுபாட்டை தடுத்திட வேண்டும். தமிழிலும் அனைத்து செய்திகளும் கிடைக்கப் பெறச் செய்திட வேண்டும்.

எல்லா நிலைகளிலும் தமிழின் பயன்பாட்டை அதிகரித்திட வேண்டும். கற்பதற்கு எளிமையானதும், அதே சமயம் மிக உயரியதுமான மொழியெனில் அது தமிழ் தான் என்கின்ற நிலைப்பாட்டை ஏற்படுத்திட வேண்டும். இதைத் தமிழ் மக்கள் அனைவரும் தம் வாழ்நாளில் கிடைத்திட்ட பாக்கியமாகக் கருதி தம் தாய்மொழி தமிழுக்கென அருந்தொண்டாற்றிட  வேண்டும். ஒவ்வொருவரும் இதைக் கடமையாகக் கருதி செயலாற்றிட வேண்டும். வெட்டி அரசியலை புறக்கணித்து இன்றே தமிழை வளர்க்க முனைந்திடுவோம்.

1 comment:

  1. Arumaiyana Sinthanai ulla nalla kavithai keep it up ................................By Reegan villupuram

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive