Tamil Thirukural

Monday, January 31, 2011

தமிழ் ஆபிரஹாம் லிங்கன் கதை - true story of Abraham Lincoln- Tamil
ஆபிரஹாம் லிங்கன்

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும்  பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!

இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால் தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல…
நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.

Abraham Lincoln images, Abraham Lincoln story, Abraham Lincoln life history,

8 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive