Tamil Thirukural

Tuesday, March 22, 2011

india save srilanka on ltte war


இலங்கையில், 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, போர் நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முக்கியப் பங்காற்றியதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் மூலம் வெளியான அமெரிக்க ராஜாங்க தகவல் பரிமாற்றத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
விக்கிலீக்ஸ் தகவல்களை ஹிந்து நாளிதழ் பிரசுரித்துள்ளது.
இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் பொதுமக்கள் பலியாவது குறித்துக் கவலை தெரிவித்த இந்திய அரசு, அதே நேரத்தில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்வதை எதிர்க்கவில்லை என்று அமெரி்க்கத் தகவல் பரிமாற்றத்தில் கூறப்பட்டுள்ளது.
முகர்ஜி முயற்சியின் 'நோக்கம்'
2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை ஜனாதிபதியை அவரது மாளிகையில் சந்தித்த அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சரான பிரணாப் முகர்ஜி, மனித உரிமைகள் மற்றும் சிவிலியன்கள் பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர வேறு எந்த நோக்கத்துடனும் தான் வரவில்லை என்று கூறியதாக அமெரிக்கத் தூதரிடம் இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.
அதாவது, போர் தொடர்வதை இந்தியா எதிர்க்கவில்லை என்று அவர் வெளியிட்ட அறிக்கை மூலமே தெளிவாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், 23 ஆண்டு மோதலுக்குப் பிறகு, இராணுவம் பெருகின்ற வெற்றி, இலங்கையின் வடக்கிலும் மற்ற பகுதிகளிலும் சகஜ நிலையையை நிலைநாட்டுவதற்காக அரசியல் ரீதியாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று கூறியிருந்தார்.
மத்தியில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவின் நெருக்குதலால் 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும், போரை தாற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக முயற்சிகளை மேற்கொண்டது.
அதன் பிறகு மற்ற எல்லா நேரங்களிலுமே போர் தொடர்வதை இந்தியா தடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
சிவசங்கர் மேனன் 'யோசனை'
2009-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவருடன் அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலரும் தற்போதை தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் சந்தித்தபோது, மோதலுக்குத் தீர்வு காண்பதற்காக ஐ.நா. மன்றம் தனது பிரதிநிதியை அனுப்புவதை இலங்கை அரசு விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும், போர்நிறுத்தத்துக்கும் இலங்கை அரசு தயாராக இல்லை என்றும் மேனன் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் பெற்ற தகவல் கூறுகிறது.
சர்வதேச நாடுகளின் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்காமல், குறைந்தபட்சம், விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு இலங்கை அரசுக்கு இந்தியா யோசனை கூறியதாக சிவசங்கர் மேனன் அமெரி்க்க அதிகாரியிடம் கூறியிருக்கிறார். அதே நேரத்தில், புலிகளின் முக்கியத் தலைவர்கள் யார், மற்ற தலைவர்கள் யார் என்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியும் எழுந்ததாக மேனன் கூறியிருக்கிறார்.
பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள அதே நேரத்தில், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தும் முரண்பட்ட தகவல்கள் வருவதாகவும், பிரபாரகனுக்காகப் பேசவல்லவர் யார் என்பது தெரியவில்லை என்றும், நிலைமையை பிரபாகரன் உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.
இந்தியாவில் தேர்தல் நடைபெறும் நிலையில், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற இந்தியா முன்முயற்சி எடுப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியமில்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
2009-ம் ஆண்டு மே 6, 7 தேதிகளில், இலங்கைக்கான பிரிட்டனின் சிறப்புத் தூதர் டேஸ் பிரவ்ன் இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சந்தித்தபோது, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் நிலையில் உள்ளதால், இந்த நிலையில் போரை நிறுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை தெரிவித்தாலும், போருக்குப் பிறகு, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சம்மதிக்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் இருந்ததாக பிரிட்டிஷ் தூதரக அதிகாரி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார்.
ஐ.நா. மூலம் நடவடிக்கை எடுப்பதில் 'ஆர்வமில்லை'
ஐ.நா. பாதுகாப்பு மன்றக் கவுன்சில் கூட்ட நிகழ்ச்சி நிரலில், இலங்கைப் பிரச்சினையை சேர்த்து, அறிக்கை வெளியிட்டால், இலங்கைக்கு எதிராக ஐ.நா. குரல் கொடுத்தால், அது எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என பிரிட்டன் சிறப்புத் தூதரிடம் சிவசஙகர் மேனனும், நாராயணனும் கூறியதாக விக்கிலீஸ்க் தகவல் கூறுகிறது.
ஐநா. பாதுகாப்புக் கவுன்சில் அல்லது மனித உரிமைக் கவுன்சில் மூலம் அழுத்தம் கொடுப்பதைவிட, ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளே பயனுள்ளதாக இருக்கும் என்று சிவசங்கர் மேனன் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.


sourece:bbctamil

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive