Tamil Thirukural

Saturday, April 23, 2011

khalil ibrahim tamil lines






ஊர்வலம்
வாழ்க்கை என்பது ஒரு ஊர்வலம்.
காலுக்கு வேகம் கூடியவர்கள்
அதற்கு வேகம் குறைவு என்று குறைபட்டுக் கொண்டு
ஊர்வலத்தை விட்டு வெளியேறுவார்கள்.
காலுக்கு வேகம் குறைவாக உள்ளவர்களோ
அதற்கு வேகம் கூடுதல் என்று குறைபட்டு
ஊர்வலத்தை விட்டு வெளியேறுவார்கள்."

இரண்டு வகை
ஒவ்வொரு மனிதரிலும் இரண்டு பேர் வீதம்
இருக்கிறார்கள் அல்லவா?
ஒருவர் இருட்டில் விழித்திருக்கிறார்.
இன்னொருவர் வெளிச்சத்தில் உறங்கிக் கிடக்கிறார்."

இரண்டு பக்கங்கள்
உங்களுக்குக் கொடுக்க வேண்டியதை விட 
அதிகமாகக் கொடுப்பது இரக்க குணம்.  
நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதை விட
அதிகமாக எடுப்பது மரியாதைக் குறைவான செயல்."

மறதி
சொர்க்கம் அங்கே, அந்தக் கதவுக்குப் பின்னால் 
உள்ள அடுத்த அறையில்.
ஆனால், சாவிகள் என்னிடம்  இல்லை.
ஒருவேளை, நான் அவை இருக்கும் 
இடத்தை மறந்திருக்கலாம்."

கவனம்
அந்த மனிதரின் உண்மைத்தன்மை உங்களுக்கு
அவர் எதைத் திறந்து காட்டுகிறார் என்பதில் அல்ல.
அதற்கு மாறாக அவர் உங்களுக்கு
எதைத் திறந்து காட்டாமல் இருக்கிறார்
என்பதில்தான்.
அதனால்
நீங்கள் அந்த மனிதரைப் புரிந்துகொள்ள
வேண்டுமென்றால்
அவர் என்ன கூறுகிறார் என்பதில் அல்ல
எதைக் கூறாமல் இருக்கிறார் என்பதில் கவனத்தைச்
செலுத்துங்கள்."

நேரம்
உங்களுக்கு இளமையும் அதைப்பற்றிய அறிவும்
ஒரே நேரத்தில் உண்டாகாது.
காரணம் இதுதான்:
இளமை வாழ்க்கையின் மிகுந்த பரபரப்பிற்கு நடுவில்
வருகிறது.
அதனால் அதற்குத் தன்னைப் புரிந்துகொள்ள
நேரமில்லை.
அறிவு, தன்னைத்தானே தேடும்
பரபரப்பில் இருக்கிறது எப்போதும்.
அதனால் அதற்கு வாழ நேரமில்லை."

வாழ்க்கை
அவர்கள் என்னுடன் சேர்ந்து பாடுகிறார்கள்,
கையிலிருக்கும் ஒரு கிளி
காட்டிலிருக்கும் பத்து கிளிகளைவிட
மதிப்புள்ளது என்று.
ஆனால், நான் கூறுகிறேன்:
காட்டிலிருக்கும் ஒரு கிளிக்கோ , ஒரு இறகுக்கோ
கையிலிருக்கும் பத்து கிளிகளைவிட
மதிப்பு இருக்கிறது என்று.
நீங்கள் அந்த இறகுக்காகத் தேடி அலைந்து
திரிவதுதான் வாழ்க்கை.
இறகுகள் முளைத்த கால்களைக் கொண்ட
வாழ்க்கை என்றல்ல -
அந்த இறகுதான் வாழ்க்கையே."

பக்தி
ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து
பாதை வழியாகக் கடந்து செல்பவர்களை
நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது
நீங்கள் பார்ப்பீர்கள்-
உங்களின் வலது பக்கத்தில் ஒரு கன்னியாஸ்திரீ
நடந்துபோவதையும்
உங்களின் இடது பக்கத்தில் ஒரு விலைமாது
நடந்து செல்வதையும்.
அப்போது உங்களின் கள்ளங்கபடமற்ற மனதில் 
நீங்கள் முணுமுணுப்பீர்கள்.
ஒருத்தி எவ்வளவோ நல்லவள்.
இன்னொருத்தி எவ்வளவோ கெட்டவள்.
தொடர்ந்து நீங்கள் கண்களை மூடி கவனித்தால் 
காற்றில் கலந்து ஒரு மெல்லிய குரல் ஒலிக்கும்.
நல்லவள் பிரார்த்தனை மூலமாகவும் 
கெட்டவள் வேதனைகள் மூலமாகவும்
கடவுளைத் தேடுகிறார்கள்.
இரண்டு பேர்களின் மனதிலும் 
தெய்வத்திற்கு ஒரு இடம் இருக்கவே செய்கிறது."

மணலும் நுரையும்
மணலுக்கும் நுரைக்கும் நடுவில்
நான் எப்போதும் இந்தக் கரையில் உலாவுவேன்.
என் கால் சுவடுகள்
அலைகள் பட்டு அழிந்துபோகும்.
காற்று வந்து நுரையை அடித்து இல்லாமல் செய்யும்.
எனினும் எப்போதும்
கடலும் கரையும் இருக்கும்
என்றென்றைக்கும்."

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Blog Archive